ஞாயிறு, 17 ஜனவரி, 2010

சோகத்தில் முடிந்த எல்லை தாண்டிய காதல் : பஞ்சாப் இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த பரிதாபம்

சண்டிகார் : நாடு, ஜாதி, மதம் போன்ற தடைகளை கடந்து உருவான காதல், விதியின் வலிமை காரணமாக, சோகத்தில் முடிந்த பரிதாபம் பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பகுவராவைச் சேர்ந்தவர் பிரியங்கா என்ற இளம் பெண். துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரின் நண்பரான தாரிக் என்பவருடன் பிரியங்காவுக்கு காதல் ஏற்பட்டது.





தாரிக், பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம். தங்கள் காதலுக்கு மதம் ஒரு தடையாக இருப்பது குறித்து இவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. பெற்றோர் சம்மதத்துடன், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துபாயில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இருந்தாலும், இந்தியாவில், இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, இருவரும் விரும்பினர். கடந்த டிசம்பர் 29ல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர். பிரியங்காவின் வீட்டில் தங்கியிருந்தனர். ஜனவரி 8ம் தேதி திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. திருமண அழைப்பிதழை கொடுக்கும் பணியில் இருவரும் பிசியாக இருந்தனர். டிசம்பர் 31ம் தேதி தாரிக், பிரியங்கா மற்றும் பிரியங்கா குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அடுத்த நாள் புத்தாண்டு என்பதற்காக மட்டுமல்ல, தாரிக்கின் பிறந்த நாளும் அன்று தான்.




புத்தாண்டும், பிறந்த நாளும் ஒரே நாளில் வந்ததால், உறவினர்கள், நண்பர்கள் சகிதம் கொண்டாட்டங்கள் களைகட்டின. கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த களைப்பில் புத்தாண்டு அன்று இரவு 11 மணிக்கு, தாரிக் குளியலைறைக்குச் சென்றார். அரை மணி நேரத்துக்கும் மேலாகியும், குளியல் அறையில் இருந்து அவர் திரும்பவில்லை. பிரியங்காவுக்கு சந்தேகம் வந்தது. குளியல் அறை கதவை தட்டினார். எந்த பதிலும் இல்லை. பிரியங்கா குடும்பத்தினரை பதட்டம் தொற்றிக் கொண்டது. வேறு வழியில்லாமல், கதவை உடைத்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி, அவர்களை பதற வைத்தது. குளியல் அறையில் கால் வழுக்கி விட்டு கீழே விழுந்த நிலையில் கிடந்தார், தாரிக். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.




பிரியங்காவுக்கு ஆகாயமே இடிந்து தரையில் விழுந்தது போல் ஆகி விட்டது. தனது காதல் கோட்டை, இத்தனை விரைவில் இடிந்து தரை மட்டமாகும் என, அவர் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. பிரியங்காவை விட, அவரது குடும்பத்தினர் தான் மிகவும் துவண்டு போய்விட்டனர். ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு, தாரிக்கின் உடலை, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். தனது அன்பு காதலரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பினார் பிரியங்கா. ஆனால், பாகிஸ்தான் அரசு அவருக்கு விசா அளிக்க மறுத்து விட்டது. ஜாதி, மதம், எல்லை கடந்து உருவான காதல், விதியின் வலிமையால் சோகத்தில் முடிந்தது, மிகவும் பரிதாபமான நிகழ்வு தான்.

கருத்துகள் இல்லை: